கார்த்திகை தீபம்

தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமான கார்த்திகை பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது. அக்னி ரூபமாய் போற்றப்படும் சிவனுக்கும், அக்னியில் உதித்த ஆறுமுகனுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் உகந்த மாதமாக கார்த்திகை மாதம் பக்தர்களால் போற்றப்படுகிறது.

கார்த்திகை திருநாள் கார்த்திகை மாதம் கிருத்திகா நட்சத்திரத்தில் கார்த்திகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கார்த்திகை திருவிழா 02.12.2017 சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது.

கார்த்திகை தீபம் பூஜை நமது காடேஸ்வரர் கோவிலில் 2-12-2017 மாலை நான்கு மணிக்கு நடை பெற உள்ளது. அனைத்து பக்தர்களும் கலந்துகொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

அகல் விளக்கேற்றி: 

கார்த்திகை திருநாளன்று வீடுகள் தோறும் அகல் விளக்கால் அலங்கரிக்கப்படும். இந்த நாளன்று நெல் பொரியும், அவல் பொரியும் வெல்லப்பாகிலிட்டு பரம்பொருளான சிவ பெருமானுக்கு நிவேதனம் செய்வது வழக்கம்.

திருவண்ணாமலையில் கார்த்திகை:

கார்த்திகை திருநாள் திருவண்ணாமலையில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பஞ்ச பூதங்களில் நெருப்புக்குரிய தலமாக திகழ்வது திருவண்ணாமலை. கார்த்திகை தினத்தன்று தமிழகத்தின் வீடுகள் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். எங்கெங்கு காணினும் விளக்குதான். விளக்கின் ஒளி புற இருளை போக்கும். ஈசனின் நினைவு அக இருளைப் போக்கும். கார்த்திகை தினத்தன்று மாலை அகல் விளக்குகளுக்கு குங்குமப் பொட்டு வைக்கப்பட்டு, அதில் எண்ணெய் ஊற்றி,பஞ்சாலோ, திரியாலோ ஆன திரியைப் போட்டு பூஜை செய்து, விளக்கு ஏற்றப்பட்டு வீட்டின் அறைகளிலும், ஜன்னல்களிலும், வாசலிலும் ஏற்றி வைக்கப்படும். அலங்காரமாக வைக்கப்பட்டிருக்கும் விளக்குகள் கண் கொள்ளா காட்சியாக இருக்கும். இரவை பகலாக்கும் இந்த தீபத் திருநாள் 3 நாள் கொண்டாடுப்படுகிறது.

கார்த்திகை விளக்கின் தத்துவம் : 

எண்ணெய் கரைகிறது, திரி கருகுகிறது. ஆம்… தீபம் என்பது தன்னை கரைத்துக் கொண்டு மற்றவர்களுக்கு ஒளி வழங்குகிறது. பிறர் நலம் பேணுவதற்காக தான் உயிரையே தியாகம் செய்ய வேண்டும் என்பது கார்த்திகை தீபத் தத்துவம்.

தீபம் ஏற்றும் முறை : 

திருக்கார்த்திகை திருநாளில் கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்குத் திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும். வடக்குத் திசை நோக்கி ஏற்றினால் திருமணத்தடை அகலும். எக்காரணம் கொண்டும் தெற்குத் திசை நோக்கி விளக்கு ஏற்றக்கூடாது.

தீபத்திருநாளன்று குறைந்தபட்சம் 27 தீபங்கள் ஏற்றவேண்டும். வீட்டு வாசலில் லட்சுமியின் அம்சமான குத்து விளக்கில் தீபம் ஏற்றுவது நல்லது. கார்த்திகை திருநாளன்று நெல் பொரியை நைவேத்தியமாக படைத்தால் சிவனருள் கிடைக்கும்.

ஒரு முகம் ஏற்றினால் – நினைத்த செயல்கள் நடக்கும்.

இரு முகம் ஏற்றினால் – குடும்பம் சிறக்கும்.

மூன்று முகம் ஏற்றினால் – புத்திர தோஷம் நீங்கும்.

நான்கு முகம் ஏற்றினால் – செல்வம் பெருகும்.

ஐந்து முகம் ஏற்றினால் – சகல நன்மைகளும் உண்டாகும்.

இத்தனை சிறப்பு வாய்ந்த திருக்கார்த்திகை நன்னாளில் விளக்கேற்றி… வாழ்வில் வளம் பெறுவோமாக!


Discover more from அருள்மிகு காடையீஸ்வரர் திருக்கோவில்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *