கொங்கு வேளாளர் இனத்தில் மிக உயர்வான ஒழுக்கமாகப் போற்றப்படும், பெண்ணின் கற்பு நெறிக்கு சான்றாக விளங்கும்; சாமி செய்தல் என்ற சீரினைப் போன்றே எழுதிங்கள் என்ற சீரும் சிறப்புத் தன்மை வாய்ந்ததாகத் திகழ்கின்றது.
பெண்ணின் பிறந்த வீட்டாரால் செய்யப்படும் இச்சீரானது கொங்கு வேளாள பெண்களின் கற்பு நிலையை மெய்ப்பிக்கின்றது.
தான்பெற்ற மகள், பருவமடைவதற்கு முன்னர், மகனாக இருந்தால் திருமண வயதை அடைவதற்கு சில வருடங்கள் முன்பு இச்சீரினை செய்து கொள்வர். சுமார் 40 வயதளவில் நடைபெறும் இச்சீரானது இது நாள் வரையிலான அவளது களங்கமற்ற கற்பு வாழ்க்கையை மெய்ப்பிக்கும்.
எழுதிங்கள் சீர் நடைபெறும் நாளன்று காலை உற்றார் உறவினர் சீர்செய்து கொள்ளும் பெண்ணின் வீட்டில் புடை சூழ்வர். அன்றைய காலை நேரத்தில் காலை நேரத்தில் ஒரு குறிப்பிட்ட நல்ல நேரத்தில் அருமைக்காரர் வந்திருந்து முகூர்த்தக்கால் நடுவார். முகூர்த்தக்கால் என்பது ஆல், அரசு, அல்லது பால்மரம் ஆகியவற்றின் கிளை ஒன்றினைக் கொண்டு வந்து அதில் நவதானியங்களை மஞ்சள் துணியில் முடி போட்டு வீட்டில் உள்ள பந்தக்காலில் கட்டி பூஜை செய்வதாகும்.
அன்று, ஐந்து லிட்டர் தினைமாவைப் பிசைந்து அதனை இரண்டு கூறாக்கி அச்சு வெல்லங்களை நடுவில் வைத்து அதனை பாதி மாவினால் மூடி புதுப்பானையில் மூன்று லிட்டர் தண்ணீர் விட்டு, மாவு தண்ணீரில் நனையாதபடி நடுவில் குச்சிகளையும் அரச இலைகளையும் பரப்பி வைப்பர்.
புடச்சட்டி எடுத்தல்
சீர்பெறும் பெண்ணின் சகோதரன் அப்புதுப்பானைக்கு பூ, பொட்டு வைத்து அடுப்பில் ஏற்றி மாவு வேகும் வரை எரிப்பான். மாவு வெந்த பிறகு நீராடுவான். பின்னர், வெந்த மாவினை அடுப்பிலிருந்து இறக்கி வைப்பான். இதற்கு புடச்சட்டி தூக்குதல் என்று பெயர்.
சீர்பெறும் பெண்ணை, வீட்டு வாசலில் சாய்த்து வைக்கப்பட்டு இருக்கும் மர உரலின் முன் நிறுத்தி உடன் பிறந்தாளுக்கு இலந்தை முள்குடை பிடிப்பான்; அப்பெண்ணின் சகோதரன்.
அப்போது நாவிதன் கொழுவை பழுக்க காய வைத்துஅதன் மீது மோரை ஊற்றி ஒலி எழுப்புவான். சீர்பெறுபவள் மர உரலை உதைத்து தள்ளிவிட்டு வீடு புகுவாள். உரலுக்குள் வைக்கப்பட்டிருக்கும் குழவிக் கல்லை எடுத்து சீர்பெறும் பெண்ணின் மடியில் வைத்து ஆக்கையிட்டு நீர் வளர்த்து முதுகினில் சிவப்பு இடுவர்.
கோதைச்சீர்
மறுநாள் காலை புடைச்சட்டியில் வெந்த மாவினை எடுத்து பேழை மூடியில் வைத்து அதற்கு பூ பொட்டு வைத்து அதனை வாயில் நிலைப்படியில் வைப்பர். பிறகு கோடாரி எடுத்து அதற்கும் பூ பொட்டு வைத்து துணிசுற்றி பிடித்துக்கொண்டு அருமைக்காரியுடன் சீர்பெறும் மங்கையும் சேர்ந்து அந்த மாவினை அழுத்தி அதனை நான்கு கூறுகளாக பிரிப்பர்.
அப்போது நடுவில் உள்ள வெல்லம் கரையாமல் இருப்பது குடும்பத்திற்கு நல்லது என்பர். இதுவே கோதைச்சீர் எனப்படும். இந்நிகழ்ச்சி முடிந்தவுடன் சீர் பெறும் மங்கையானவள் சிறிய பானையில் சாதம் சமைத்து அனைவருக்கும் படைத்து தானும் உண்பாள். இதற்கு முடாச்சோறு தோண்டல் என்பர்.
Discover more from அருள்மிகு காடையீஸ்வரர் திருக்கோவில்
Subscribe to get the latest posts sent to your email.